தாலிபானுக்கு பாகிஸ்தான் ரகசிய ஆதரவு

பட மூலாதாரம், BBC World Service
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொள்ளத் தயாராகும் நிலையில், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான கிளர்ச்சியாளர்களுடன் வைத்திருக்கும் உறவு குறித்து , அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முறுகல் நிலை நிலவுகிறது.
பாகிஸ்தான், தன் எல்லைக்குள் இருந்து கொண்டு இயங்கும் தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகம் தன்னால் செய்ய முடியும் என்று கடந்த வாரம்தான் ஒப்புக்கொண்டது.
ஆனால் உண்மையில் பாகிஸ்தான் இந்தக் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்று பிபிசியின் புலனாய்வு ஒன்று தற்போது கண்டறிந்துள்ளது.
வெளிப்படையாக அமெரிக்காவின் கூட்டாளி போல நடித்துகொண்டு , உண்மையில் பாகிஸ்தான் தாலிபானை ரகசியமாக ஆதரித்து வருகிறது என்ற இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்று கூறுகிறார் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவு ஆற்றிய பங்கு குறித்து ஆராய அமெரிக்க அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சி.ஐ.ஏ அதிகாரி ப்ரூஸ் ரெய்டல்.
"தாலிபானுக்குப் பணம், பயிற்சி தந்த பாகிஸ்தான்"
“ எங்களுக்கு கிடைத்த உளவுத்தகவல்கள் குழப்பமற்றதாகவே இருந்தன. ஆப்கானிஸ்தானில் நடந்த கிளர்ச்சிக்கு பாகிஸ்தானிய ராணுவமும் , பாகிஸ்தானின் உளவுப்பிரிவான, ஐ.எஸ்.ஐயும் தீவிர ஆதரவளித்ததை நாங்கள் கண்டோம். பாகிஸ்தான் தாலிபானுக்காகப் பணம் திரட்டியது, தாலிபானுக்கு பயிற்சி தந்தது, நேட்டோ படைகள் மீது தாக்குதல்களை நடத்த தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் வல்லுநர்களையும் அனுப்பியது” என்றார் ரெய்டல்

பட மூலாதாரம், BBC
2008ம் ஆண்டில், இந்தியாவின் மும்பை மாநகரில் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் துவம்சத் தாக்குதல் நடத்தியபோது,அவர்கள் பாகிஸ்தானின் உத்தரவுப்படிதான் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பதை அமெரிக்கா உணர்ந்தது. மேலும் அதற்கடுத்த ஆண்டு, அமெரிக்கா பாகிஸ்தானின் ஆப்கன் எல்லைக் கிராமங்களில் நடத்தப்போகும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல் தருவதை நிறுத்திய பின்னர்தான், இந்த ஆளில்லா விமானத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நடந்தன.
“ முதலில் இந்த ட்ரொன் விமான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தகவல்கள் தெரிவிப்போம். அப்போதெல்லாம் ஒவ்வொருமுறையும் , நாங்கள் தாக்கவிருந்த இலக்கு தப்பிவிடும். இதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் ஒன்றும் பெரிய துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸாக இருக்கவேண்டியதில்லை” என்றார் ப்ரூஸ் ரெய்டல்
தாலிபான் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவுவதை தடுக்க அமெரிக்கப் படைகள் எடுத்த முயற்சிகளை எல்லாம் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தடுத்து வந்தது என்கிறார் அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் மைக் வால்ட்ஸ்.
“ பாகிஸ்தான ராணுவச் சாவடிகளுக்கு அருகே நாங்கள் நடவடிக்கைகள் எடுத்த போதெல்லம்,ராணுவத்தினர், டார்ச் விளக்குகளை அணைத்தும், ஒளிர வைத்தும் சமிக்ஞைகள் கொடுப்பதை பார்த்தோம். ஒரு தொடர் விளக்கு சமிக்ஞை போல, ஒரு முகட்டிலிருந்து மற்றொரு முகட்டுக்கு இந்த சமிக்ஞைகள் தொடரும் . பிறகு இந்த சமிக்ஞைகளால், எங்களது இலக்குகள் எல்லாம் ஓடிப்போனதைக் கண்டோம்”, என்றார் வால்ட்ஸ்.
மறுக்கும் பாகிஸ்தான்

பட மூலாதாரம், AP
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பாகிஸ்தான் ராணுவம் மறுக்கிறது. அவர்களது எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் ராணுவமே கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ஒரு போரை நடத்தி வருவதாக அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். தாலிபானை தாங்கள் ஆதரிப்பதாக வரும் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் ராணுவத்துக்காகப் பேசவல்ல ஜெனரல் அத்தர் அப்பாஸ் மறுக்கிறார்.
ஆனால் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் ஹமித் குல், பாகிஸ்தான் தனது நீண்ட காலப் பாதுகாப்புக்கு ஆப்கானிஸ்தானில் அதற்குள்ள தொடர்புகளைப் பேணுவது அவசியம் என்கிறார்.
“ எங்கள் கொல்லைப்புறத்தில் ஒரு விரோதப்போக்குடைய ஆப்கானிஸ்தானை நாங்கள் வைத்திருக்கமுடியுமா ? முடியாது. நாட்டின் ஒட்டுமொத்த விவேகமும், தாலிபானுடன் நல்ல தொடர்புகளை நாங்கள் தொடர்ந்து வைத்திருப்பது அவசியம் என்றுதான் கூறுகிறது. அதுதான் பாகிஸ்தானின் தேசிய நலன் சார்ந்த விஷயம் என்று எல்லோருக்கும் தெரியும்”,என்றார் குல்
ஆனால் இந்த புதிய தகவல்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசுகளுக்கு மேலும் சிக்கலான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த இரு நாடுகளுமே, பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் நிதி உதவி செய்யும் நாடுகள். பாகிஸ்தானை இரு நாடுகளுமே ஒரு கூட்டாளியாகத்தான் இதுவரை பார்த்து வருகின்றன.
































