தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்- பாகம் 17

பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தில் பர்மா தமிழர்களின் உணவுக் கடை
படக்குறிப்பு, தமிழகத்தில் பர்மா தமிழர்களின் உணவுக் கடை

பர்மிய சமூகத்தில் உயர்நிலையில் இருந்து செட்டியார்களும், பிராமணர்களும் நாடு திரும்பிய பிறகு தமது குடும்பச் செல்வாக்கு காரணமாகவும், சமூகத் தொடர்புகள் காரணமாகவும் வேகமாக தமது வாழ்க்கையை மீளத் துவங்கினர்.

விவசாயிகளாகவும், சிறு தொழில்புரிபவர்களாகவும் இருந்த லட்சக்கணக்கான பிற தமிழர்களுக்கோ இந்தியா திரும்பிய பிறகு வாழ்க்கையை மீளத் துவங்குவது பெரிய சவாலாக இருந்துள்ளது.

பர்மாவில் தமிழர்கள் மீது நேரடியான வன்முறை பிரயோகிக்கப்படவில்லை. ஆனால் சமூக மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு தமிழ் சமூகம் உள்ளானது.

போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னை பாரிமுனைப் பகுதியில் உயர்நீதிமன்ற வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளது பர்மா பஜார்.

1960களிலும் 70களிலும் பர்மாவில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மயமாக்கல் நடவடிக்கையின் போது பர்மியக் குடியுரிமை பெறாதவர்கள் வேலை செய்யமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் பல ஆயிரம் பேர் வேலை இழந்ததாகக் கூறுகிறார் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்து அகதியாக இந்தியாவுக்கு வந்த கவிஞர் வேணுகோபால்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை அழைத்து வர இந்திய அரசு கப்பல்களை அனுப்பியது. அந்தக் காலகட்டத்தில் மொத்தம் 3 லட்சம் பேர் அகதிகளாக வந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

பர்மா பஜார்கள்

பர்மாவிலிருந்து வந்து சொந்த நாட்டில் வாழ்க்கையை மீளத் தொடங்கிய குடும்பம் ஒன்று
படக்குறிப்பு, பர்மாவிலிருந்து வந்து சொந்த நாட்டில் வாழ்க்கையை மீளத் தொடங்கிய குடும்பம் ஒன்று

பர்மிய அகதிகள் தமது வாழ்க்கையை மீளத் துவக்க பல இடங்களில் பர்மா பஜார் என்ற வர்த்தகப் பகுதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அவர்கள் வாழ பல பர்மா காலனிகள் உருவாக்கப்பட்டன. வீடு கட்டிக் கொள்ள மானியமும் சிலருக்கு கிடைத்துள்ளது.

தனது தந்தையுடன் சிறுவனாக இந்தியாவுக்கு வந்த ஷாகுல் ஹமீது தனது கையில் போட்டிருந்த இரு மோதிரங்களை விற்று வியாபாரத்தை துவங்கினார். தனது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர பல ஆண்டுகளானதாக அவர் கூறுகிறார்.

பர்மாவில் இருந்து வந்தவர்கள் தமிழகத்தின் பல இடங்களில் வாழ்கின்றனர். இந்து, முஸ்லீம் என்ற வேறுபாடுகள் இவர்களிடம் குறைந்த அளவே காணப்படுகிறது.

மற்றத் தமிழர்களை இவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.இருந்தும் ஒரு சில இடங்களில் பர்மிய தமிழர்களை மட்டுமே கொண்ட குடியிருப்புப் பகுதிகளும் இருக்கின்றன. இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தில் ஒன்றிப் போய்விட்டனர்.

ஆனால், இவர்களின் பெற்றோர்கள் பலர் பர்மிய ஞாபகங்களை மறக்காமல் நினைவு வைத்துள்ளனர். பலரின் உறவினர்கள் இன்றைக்கும் பர்மாவில் இருக்கின்றனர். பிறந்து வளர்ந்த இடத்தை பார்க்க வேண்டும், உறவுகளைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் பரவலாக இருக்கிறது.

பர்மா சென்று வந்தவர்களோ அங்கே நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தமது உறவினர்கள் பொருளாதார ரீதியாக கீழே விழுந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

கவிஞர் வேணுகோபால்
படக்குறிப்பு, கவிஞர் வேணுகோபால்

தமிழகத்திலேயே பல தசாப்தங்கள் வாழும் காரணத்தால் பலர் தமிழ் சாப்பாட்டுக்கு முழுமையாக மாறிவிட்டாலும், பர்மாவை ஞாபகப்படுத்தும் உணவுகளும் இங்கே கிடைக்கின்றன.

பர்மாவின் புகழ்பெற்ற பிலிகன் முனீஸ்வரன் கோயிலில் இருந்து மண்ணை கொண்டு வந்து அதன் மீது இங்கு சென்னையில் ஒரு முனீஸ்வரன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பர்மா தேக்கால் கோயில் கொடிமரம் செய்யப்பட்டுள்ளது.

பர்மாவில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயப் பின்னணி கொண்டவர்கள். ஆனால் தமிழகத்தில் நகர்புறங்களில்தான் அவர்கள் வாழ்வதற்கான இடம் ஒதுக்கப்பட்டது.

முதலில் பல கஷ்டங்களை அவர்கள் அனுபவித்தாலும், இங்கே உயர்வதற்கான பல வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. பலர் அரசு வேலைகளில் சேர்ந்துள்ளனர். சிலர் உயர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

பர்மாவில் இருந்து மீண்டும் வந்த தமிழர்கள் பல ஆண்டுகள் தனித்து வாழ்ந்ததால் அவர்களைப் பற்றிய புரிதல் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தில் சற்று குறைவாகவே உள்ளது.