முன்னாள் போர் வலயத்தில் துளிர்விடும் கிரிக்கெட் ஆர்வமும் சவால்களும்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காகவும் இளைஞர்களை கிரிக்கெட்டின் பக்கம் ஈர்க்கும் முயற்சியாகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் பெயரில் தொடங்கப்பட்ட முரளி ஹார்மனி கப் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இம்முறையும் முன்னார் போர் வலயங்களான வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நடந்துள்ளன.
நவம்பர் 1-ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளிலிருந்தும் தென்னிலங்கையில் கிரிக்கெட்டில் பிரபலமான முக்கிய சில பாடசாலைகளிலிருந்துமாக 16 கிரிக்கெட் அணிகள் மோதின.

இறுதிப்போட்டி கண்டி ட்ரினிட்டி கல்லூரி அணிக்கும் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரி அணிக்கும் இடையில் நாளை செவ்வாய்க் கிழமை (நவம்பர் -5-ம் திகதி) நடக்கிறது.
வடக்கிலங்கையின் முன்னாள் போர்ப் பிரதேசங்களான யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாங்குளம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள 5 மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடந்தன.
19 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு அணிகளும் 23 வயதின் கீழ் பெண்கள் பிரிவு அணிகளுமாக 20 அணிகள் முரளி ஹார்மனி கப் போட்டியில் விளையாடின.
முன்னாள் போர் வலயப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பள்ளி மாணவர்களிடையே இந்த முரளி ஹார்மனி கப் சுற்றுப்போட்டி எந்தளவுக்கு கிரிக்கெட் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று இந்தச் சுற்றுப்போட்டிகளுக்கான முல்லைத்தீவு மாவட்ட அணிக்கான பயிற்றுவிப்பாளர் மகாராஜா கஜதீபனிடம் பிபிசி தமிழோசை வினவியது.

கடந்த போர்க்காலங்களில் வடக்கு கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு எட்டாதிருந்த கிரிக்கெட் வாய்ப்புகள் இப்போது கிடைக்கத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பிரதேசங்களில் கிரிக்கெட் மைதானங்கள் சீரமைக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
எனினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் கிரிக்கெட் அணிகளுக்கு அடிப்படை கிரிக்கெட் நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பதற்கு போதுமான கிரிக்கெட் பயிற்றுனர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு சம்பளம் கொடுத்து ஊக்குவிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.