'வடக்கு கிழக்கு காணி சுற்றறிக்கை வாபஸ்':சுமந்திரன்

பிரசுரிக்கப்பட்டது

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை நிர்வகிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுக்களை நியமிப்பதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையை கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதிருந்த நிலையிலேயே, தாங்கள் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு விடயத்தைக் கொண்டுவந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை மீண்டும் பதிவுசெய்யுமாறு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, காலக்கெடுவும் விதித்திருந்த குறித்த சுற்றறிக்கை சட்ட முரணானது என்பதை சட்டமா அதிபரும் காணி அமைச்சும் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.