மதுரையில் வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமம் கட்டாயம்: மாநகர ஆணையர் நடவடிக்கை

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மீன், இறைச்சி கடைகள் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை வளர்க்கவும் உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஆகஸ்ட் 10 நேரலை நிறைவடைகிறது

    வணக்கம் நேயர்களே,

    இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம்.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. டோக்யோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தற்காலிக நீக்கம்

    டோக்யோ ஒலிம்பிக்
    படக்குறிப்பு, பயிற்சியின்போது வினேஷ் போகாட்

    இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. ஒழுங்கீன புகார் விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமது தரப்பு விளக்கத்தை ஆகஸ்ட் 16ஆம் தேதி வழங்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெலாரூஸ் வீராங்கனையுடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தார் வினேஷ் போகாட்.

    என்ன பிரச்னை?

    டோக்யோ ஒலிம்பிக் பயிற்சிக்காக ஹங்கேரியில் உள்ள பயிற்சியாளர் வல்லர் எகோஸிடம் பயிற்சி எடுத்து வந்தார் வினேஷ் போகாட்.

    அங்கிருந்து நேரடியாக அவர் டோக்யோவுக்கு புறப்பட்டார். அவர் டோக்யோவில் தரையிறங்கியதும் சர்ச்சை தொடங்கியது. அங்கு விளையாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விளையாட்டு கிராமத்தில் மற்ற இந்திய வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட வினேஷ் போகாட் ஒத்துழைக்கவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

    அது மட்டுமின்றி இந்திய அணியின் அலுவல்பூர்வ ஸ்பான்சர் ஆன ஷிவ் நரேஷின் ஜெர்சி ஆடையை அணியவும் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தமது பயிற்சியின்போது நைக்கி சின்னம் பொறித்த ஆடையை அவர் அணிந்தார்.

    இது குறித்து பிடிஐ செய்தி முகமையிடம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு வட்டாரம் கூறும்போது, "வினேஷ் போகாட்டின் செயல் அப்பட்டமான ஒழுங்கீனம். அதனால், அவர் மல்யுத்த செயல்பாடுகளில் ஈடுபடாத வகையில் தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். எனவே உள்நாடு மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்த நடவடிக்கை அமலில் உள்ள காலத்தில் அவரால் பங்கேற்க முடியாது. இறுதி முடிவு எடுக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்," என்று தெரிவித்தது.

    வினேஷ் போகாட்டின் செயல்பாட்டால், தமது வீரர்களை கூட கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியவில்லையா என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் விமர்சனத்தை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு எதிர்கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்புக்கு ஒலிம்பிக் சங்கமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

    டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன் இந்திய வீராங்கனைகள் சோனம், அன்ஷு மாலிக், சீமா பிஸ்லா ஆகியோர் தங்கிய அறைகளுக்கு அடுத்த அறையில் தங்க வினேஷ் போகாட் ஒப்புக் கொள்ளவில்லை.

    அவர்களுடன் இருந்தால், தமக்கு கொரோனா தொற்று பாதிப்பு வரலாம் என்று அவர் அச்சம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஹங்கேரியில் பயிற்சி பெற்ற வீராங்கனை என்பதால், தன்னை இந்திய வீராங்கனை ஆக நினைத்துக் கொள்ளாமல் வெளிநாட்டு வீரரைப் போல அவர் நடந்து கொண்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி கூறினார்.

    பயிற்சி அட்டவணைப்படி இந்திய வீராங்கனைகளுடன் பயிற்சியில் ஈடுபட வேண்டிய நாளில், அவர் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது கடுமையான ஒழுங்கினம் மட்டுமின்றி ஏற்றுக் கொள்ள முடியாத செயல்பாடு என்றும் அந்த அதிகாரி கூறினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக வினேஷ் போகாட் இன்னும் தமது நிலையை தெளிவுபடுத்தவில்லை.

  3. மதுரையில் கால்நடைகள் வளர்க்க இனி உரிமம் கட்டாயம்: மாநகராட்சி நிர்வாகம், பிரபுராவ் ஆனந்தன்

    மதுரை ஆட்சியர் அலுவலகம்
    படக்குறிப்பு, மதுரை ஆட்சியர் அலுவலகம்

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகள் வளர்க்க இனி உரிமம் அவசியம் என்று மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    இவர் மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ஆணையாளர் கார்த்திகேயன் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளை ஒழுங்குபடுத்தவும், அங்கு சுகாதார முறையில் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும் புதிய உரிமம் பெறும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மாநகராட்சி பகுதியில் தொழில் புரிபவர்களுக்கு தொழில் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உரிமத்தை இறைச்சி மற்றும் மீன் கடைகள் பெறுவதில்லை. மேலும் கடை உரிமையாளர்கள் இறைச்சிக் கழிவுகளை சாலைகள் மற்றும் வாய்கால்களில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    இதே போல் இறைச்சியில் கலப்படம் மற்றும் மீன்களில் ரசாயனம் கலப்பது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன.

    எனவே இறைச்சி,மீன் கடைகளை ஒழுங்குப்படுத்த மாநகராட்சி உரிமம் (லைசென்சு) வழங்க முடிவு செய்து உள்ளது. அதன் அடிப்படையில் மாநகரில் இறைச்சி,மீன் கடை வைத்திருப்பவர்கள் இனி மாநகராட்சியிடம் இருந்து உரிமம் பெற வேண்டும்.

    இதற்கு அந்த கடைகளின் அளவுக்கு சதுர அடிக்கு ஆண்டுக்கு ரூ.10 என கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். உதாரணமாக ஒரு கடை 200 சதுர அடி என்றால் சதுரடிக்கு ரூ.10 வீதம் மொத்தம் அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் உரிமத்தொகையினை ஆண்டு உரிமக்கட்டணமான செலுத்த வேண்டும்.

    இந்த உரிமம் பெறாதவர்கள் இனி மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி,மீன் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதே போல் சாலைகளில் மீன்,இறைச்சி வியாபாரம் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. அவர்களுக்கு இந்த உரிமம் வழங்கப்படமாட்டாது.

    மேலும், மாநகராட்சியின் வதை கூடங்களில் மட்டுமே இனி இறைச்சிகளை வெட்ட வேண்டும். கடைகளில் வைத்து உயிருள்ள ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை வதம் செய்து விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கழிவு நீர் வாய்க்கால்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமம்

    இதை தொடர்ந்து இனி வீடுகளில் நாய், மாடு, ஆடு, குதிரை வளர்த்தால் அதற்கு மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ.10 செலுத்தி உரிமம் பெற வேண்டும்.

    வளர்ப்பு பிராணிகளை மாநகராட்சியில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். உரிமம் பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இதே போல் மாடு, ஆடு, குதிரைகளை சாலைகளில் விட்டால் அதற்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு, தினமும் அதன் பராமரிப்புக்காக ரூ.200 வசூலிக்கப்படும்.

    வீட்டில் வளர்க்கும் நாய்களை வீதிகளில் கொண்டு செல்லும்போது அவற்றால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அந்த வளர்ப்புப் பிராணியின் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்..

    இந்த புதிய நடைமுறைகள் இன்றிலிருந்து 15 நாளில் அமலுக்கு வர இருப்பதாக மாநகராட்சி நகர் நல அலுவலர் தெரிவித்துள்ளார்.

    இந்த நடைமுறைகள் தொடர்பாக ஏதும் ஆட்சேபம் இருந்தால் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  4. அகரம் அகழாய்வில் கல் தூண் கண்டெடுப்பு, பிரபுராவ்ஆனந்தன்:

    அகழாய்வு
    படக்குறிப்பு, அகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல் தூண்

    சிவகங்கை மாவட்டம் அகரத்தில் தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட கல் தூண்ட கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டத்தின் திருப்புவனம் அருகே கீழடி ,கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த பிப்ரவரி முதல் 7ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.

    இதுவரை இப்பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வில் 850க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    கீழடியில் இதுவரை மண்பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவு தொழில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மை மற்றும் கண்ணாடி பாசிகள், வெள்ளிக்காசு, செப்பு மோதிரம், உறைகிணறுகள், சுடுமண் காதணி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன

    அகரத்தில் பாசி மணிகள், உறை கிணறு போன்றவை கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு அடி உயரம் ஒரு அடி அகல கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் தோண்டும் போது கல் தூணின் உயரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

    அகழாய்வு
    படக்குறிப்பு, அகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல் தூண்
  5. சுதந்திரம் பெற்று விட்டாரா இளவரசி லத்தீஃபா?

    princess latifa

    துபாய் ஆட்சியாளரின் மகள் இளவரசி லத்தீஃபாவை விடுவிக்க வேண்டி நடத்தபட்டு வந்த பிரசாரம் கைவிடப்பட்டுள்து அவர் ஐஸ்லாந்தில் இருக்கும் படங்கள் வெளியானபின் இது நிகழ்ந்துள்ளது.

    அவருடன் இதற்கு முன்பும் ஒன்றாகப் படம் எடுத்த பெண்ணால் இப்படம் பகிரப்பட்டுள்ளது. தம் சொந்த விருப்பத்தின்பேரில்தான் இளவரசி லத்தீஃபா துபாயில் இருந்து வெளியேறினாரா என்று இதுவரை அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

  6. தமிழக முதல்வருடன் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி சந்திப்பு

    போராட்டம்
    படக்குறிப்பு, கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு முன்பாக குவிந்துள்ள அதிமுகவினர்.

    தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக இயக்குநர் கந்தசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.

    எஸ்.பி. வேலுமணி வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு அதிமுக தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர்களை அரசு பழிவாங்கும் எண்ணத்துடன் நடத்தக்கூடாது என்றும் அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்காமல் மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதற்கிடையே, எஸ்.பி. வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சில இடங்களில் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  7. அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்

    சென்ற ஆண்டு நடந்த பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை வெளியிடாததற்கு எட்டு அரசியல் கட்சிகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

    காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  8. மக்களிடம் மன்னிப்பு கேட்ட கிரீஸ் பிரதமர்

    Greece fires: PM apologises

    கிரீஸ் நாட்டின் பல இடங்களில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பிரதமர் கிரியகோஸ் மிட்சோடக்கீஸ்.

    கிரீஸ் நாட்டின் எவியா தீவில் ஒரு வார காலமாக காட்டுத் தீ எரிந்து வருகிறது.

    தலைநகர் ஏதென்ஸ் அருகே உள்ள இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத் தீ எரிந்தாலும் எவியாவில் மட்டும் சுமார் 650 தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.

    "மனிதர்களால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்தோம்; ஆனால், அவை போதுமானதாக இல்லை," என்று கூறியுள்ளார் கிரீஸ் பிரதமர்.

  9. இந்திய அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    உச்ச நீதிமன்றம்

    தேர்தலில் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்த 48 மணி நேரத்திற்குள் அவர்கள் மீதான குற்ற வழக்குகளை அரசியல் கட்சிகள் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    ஆளும் கட்சிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை அந்தந்த மாநிலங்களின் உயர் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் ரத்து செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தங்களது வேட்பாளர்கள் மீதுள்ள குற்ற பின்னணியை தெரிவிக்காத அரசியல் கட்சிகளின் சின்னம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

  10. மலையாள நடிகர் சரண்யா சசி மரணம்

    saranya sasi

    35 வயதாகும் மலையாள திரைக் கலைஞர் சரண்யா சசி திருவனந்தபுரத்தில் திங்களன்று காலமானார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

    சில ஆண்டுகளாக மூளை கட்டிக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அவருக்கு சென்ற மே மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

    நிமோனியா காரணமாக அவர் உயிரிழந்தார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

    வேலுமணி

    கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை 6 மணி முதல் லஞ்சஒழிப்பு துறையினர் நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.

    அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் வீடு கோவை சுகுனாபுரம் பகுதியில் உள்ளது.

    கோவையில் உள்ள வீடு தவிர எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமாக சென்னை உள்ள பிற பகுதிகளில் உள்ள 52 இடங்களில் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது

  12. ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் தாக்குதலில் சிக்கி 27 குழந்தைகள் பலி

    தலிபான்

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டையின்போது குறைந்தது 27 குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அவை கூறியுள்ளது.

    "குழந்தைகளுக்கு எதிரான கடுமையான உரிமை மீறல்கள் மிகவும் விரைவாக அதிகரித்து வருவது" அதிர்ச்சியளிப்பதாகக ஐ.நா.வின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் கூறியுள்ளது.

    தாலிபன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றியுள்ளனர். வெளிநாட்டுப் படைகள் நாட்டை விட்டு வெளியேறி பிறகு பல பகுதிகளிலும் அவர்கள் முன்னேறி வருகின்றனர்.

    சண்டையை நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச அழைப்புகளை தாலிபன்கள் நிராகரித்துவிட்டனர்.

    கடந்த மாதத்தில் மட்டும் தாலிபன்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    கடந்த மூன்று நாட்களில் கந்தஹார், கோஸ்ட் மற்றும் பக்தியா ஆகிய மூன்று மாகாணங்களில் 27 குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மேலும் சுமார் 136 குழந்தைகள் காயமடைந்திருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

    "பூமியில் மிக மோசமான இடங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இருந்து வந்தது. ஆனால் சமீபத்திய வாரங்களில், குறிப்பாக கடந்த 72 மணிநேரங்களில் அது மிகவும் மோசமாகிவிட்டது" என்று யுனிசெஃப் ஆப்கானிஸ்தானின் சமந்தா மோர்ட் பிபிசியிடம் கூறியுள்ளார்.

    பெரும்பாலும் சாலையோர குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

    தூங்கிக்கொண்டிருந்தபோது வீடு குண்டுவீச்சில் சிதறியதாக ஒரு தாய் யுனிசெஃப் பிரதிநிதியிடம் கூறினார். அந்தச் சம்பவத்தில் தனது 10 வயது மகனுக்கு "பயங்கரமான தீக்காயங்கள்" ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். தாக்குதலுக்கு அஞ்சி பல குழந்தைகள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் வெட்டவெளியில் தூங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது..

    குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்துத் தரப்பினருக்கும் யுனிசெஃப் அழைப்பு விடுத்திருக்கிறது.

    ஆப்கானிஸ்தான் முழுவதும் இப்போது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன். அமெரிக்கா தலைமையிலான படைகள் 20 ஆண்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டுவிட்டன.

    அதன் பிறகு தாலிபன்கள் வேகமாக கிராமப்புறங்களை கைப்பற்றினர், இப்போது பெரு நகரங்களைக் குறிவைத்துள்ளனர்.

    அண்மையில் மிக முக்கியமான வடக்கு நகரமான குண்டூஸை தலிபான்கள் கைப்பற்றினர்.

    270,000 மக்கள் வசிக்கும் இந்த நகரம் கனிம வளம் நிறைந்த வடக்கு மாகாணங்களுக்கான நுழைவாயிலாக கருதப்படுகிறது. இது தஜிகிஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது, அபின் மற்றும் ஹெராயின் கடத்தலுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

    2001 க்கு முன்னர் இது தாலிபன்களுக்கு ஒரு முக்கிய வடக்கு கோட்டையாக இருந்தது. அதை மீண்டும் கைப்பற்றியிருப்பது முக்கிய மைல்கல்லாகக் கவனிக்கப்படுகிறது. இந்த நகரத்தை தாலிபன்கள் 2015 மற்றும் 2016 இல் கைப்பற்றினர், ஆனால் அதை நீண்ட காலமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை.

  13. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். நேரலைப் பகுதியில் இன்றைய முக்கிய நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.