
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கி ஜனவரி மாதம் திரைக்கு வரும் `விஸ்வரூபம்' திரைப்படத்தை திரையிடுவதில் புதுவகையான சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
பிரச்சினை ஏற்பட்டிருப்பது, கமல்ஹாசனுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில்தான்.
தனது ஒவ்வொரு முயற்சியிலும் புதிது புதிதாக சிந்தித்து, செயல்படும் கமல்ஹாசன், விஸ்வரூபம் படத்தில் மட்டுமன்றி, அதை வெளியிடுவதிலும் புதிய யுத்தியைப் புகுத்த முடிவு செய்ததற்குத்தான் எதிர்ப்பு.
வழக்கமாக, எந்த ஒரு திரைப்படமாக இருந்தாலும், திரையரங்குகளில் வெளியாகி மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் தொலைக்காட்சிகளில் திரையிட அனுமதிக்கப்படும். ஆனால், விஸ்வரூபம் வெளியீட்டில் கமல் புதிய முறையைக் கையாளப் போகிறார்.
அதாவது, திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு எட்டு மணி நேரம் முன்னதாக, DTH எனப்படும் வீடுகளில் நேரடியாக தொலைக்காட்சிகளில் திரைப்படங்களைக் காணும் வசதி மூலம் அதை வெளியிட இருக்கிறார். பல்வேறு கேபிள் சேவை நிறுவனங்கள், பணம் கட்டி திரைப்படம் பார்க்கும் வசதியை தனது தொலைக்காட்சி சந்தாதாரார்களுக்கு வழங்குகின்றன.
அவ்வாறு படம் பார்க்க அனுமதிப்பதன் மூலம், அந்தத் திரைப்படத்தைப் பார்க் மேலும் ஆர்வம் ஏற்பட்டு, அதிக அளவிலான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது கமலின் வாதம்.
ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள். இந்த முறையை எல்லோரும் பின்பற்ற முடிவு செய்தால், திரையரங்குகளை இழுத்து மூடிவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், தனது முடிவில் உறுதியாக இருக்கும் கமல்ஹாசன், தனது நிலைப்பாட்டை திரையரங்கு உரிமையாளர்களுக்குப் புரிய வைக்க தளராமல் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
அந்த முயற்சியின் ஒரு படியாக, சனிக்கிழமையன்று, கமல்ஹாசன் அவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் அதுபற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, கமல் அவர்கள் தெரிவிக்கும் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது என்றும், வரும் செவ்வாய்க்கிழமையன்று திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டுக் கூட்டத்தில் அதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திரையரங்க உரிமையாளர்களின் பிடிவாதம் தளர்ந்து வருவதாகக் கருதப்படும் நிலையில், இந்திய திரையுலகில் கமல்ஹாசனின் இன்னொரு புதிய முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும் என்று திரையுலக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.







