
தரை தட்டிய கப்பல்
நிலாம் புயல் காரணமாக சென்னை கடற்கரைக்கு அருகே தரை தட்டிய பிரதீபா காவேரி கப்பலை முடக்கி வைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பிரதீபா காவேரி கப்பல் நிலம் புயல் காரணமாக கடந்த புதன்கிழமையன்று சென்னைக்கு அருகே தரைதட்டி நின்றது.
இதில் இருந்து 22 மாலுமிகள் கடலில் குதித்துத் தப்ப முயன்றனர். மீதியுள்ள 15 பேர் கப்பலிலேயே இருந்தார்கள். 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலில் அவசரகால படகு வழியாக தப்ப முயன்றவர்களில் ஐந்து பேர் கடலுக்குள் தவறி விழுந்தனர். மீதியுள்ள 17 பேரை மீனவர்கள் பத்திரமாக மீட்டார்கள்.
இந்நிலையில், வெள்ளியன்று நான்கு மாலுமிகளின் உடல்களை கடலோரக் காவல் படையினர் மீட்டனர். மேலும் ஒருவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
உயிரிழந்தவர்களில் ஒருவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கப்பலில் பணியாற்றி உயிரிழந்த மாலுமிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரியும், கப்பல் தரை தட்டியது குறித்து நீதி விசாரணை நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து வரும் 6ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், பிரதீபா கப்பலை முடக்கி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.







