துருக்கியர்கள் விசா இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயணிக்க பரிந்துரை
துருக்கி நாட்டு குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதற்கு விசா வாங்கவேண்டும் என்கிற நடைமுறையை ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரும்படி ஐரோப்பிய ஆணையம் இன்று பரிந்துரை செய்திருக்கிறது.
ஆனால் இதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றமும் ஒன்றிய நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் துருக்கி இன்னமும் சில தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
கிரேக்கத்துக்குள் வந்த குடியேறிகளை துருக்கி திரும்ப எடுத்துக்கொள்வதற்கு பதிலாக துருக்கிக்கு இந்த சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு வர்த்தக உடன்பாடு. கிரேக்கத்திற்கு வரும் குடியேறிகளை திருப்பி எடுத்துக்கொள்ளவும், மனிதக்கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் துருக்கி உடன்பட்டதற்கு கைம்மாறாக துருக்கிக்கு நிதி அளிப்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் அது இணையவும் விசா இல்லாமல் பயணிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பா மீதான தன் செல்வாக்கு குறித்து துருக்கி உணர்ந்தே இருக்கிறது. விசா இல்லா பயணத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் குடியேறிகள் தொடர்பான ஒப்பந்தம் சாத்தியமில்லை என்று துருக்கிய பிரதமர் வலியுறுத்தினார்.
ஆனால் தற்போதைய துருக்கிய அரசை ஐரோப்பா ஊக்குவிக்கவேண்டுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
எதிர்கட்சி செய்தித்தாளை அரசு கைப்பற்றியதை எதிர்த்தவர்களை தாக்கும் அரசு, சர்வாதிகாரப்பாதையில் செல்வதற்கான இன்னொரு சமிக்ஞை.
விமர்சகர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டது. குர்து பிராந்தியங்களில் வன்முறை தூண்டப்படுகிறது.
அரசாங்கம் தடுக்கவிரும்பும் எதிர்கட்சி தொலைக்காட்சி அலுவலகத்தில் கவலை அதிகரித்துள்ளது. சரியும் ஊடக சுதந்திரமும் அதிபர் எர்தோஜனோடு ஐரோப்பா இணக்கமாக இருப்பதும் கவலைக்கு காரணங்கள்.
"ஐரோப்பா தன் கொள்கைகளில் உறுதியாக இருக்கவேண்டும். தற்போதைய சூழலில் துருக்கிய அரசு கேட்பதெல்லாம் கொடுக்கப்பட்டால், துருக்கிய அரசும் எர்தோஜனும் நாட்டின் முக்கிய ஊடகவெளியையெல்லாம் ஆக்ரமிக்கத் தயங்க மாட்டார்கள்”, என்கிறார் அரச எதிர்ப்பு தொலைக்காட்சியான ஐஎம்சி டிவியைச் சேர்ந்த பானு குவென்.
குடியேறிகளை நிறுத்துவதற்கான விலை துருக்கியின் குறைகளை சகித்துக்கொள்வது என்றானால் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக விமர்சிக்கப்படும். ஆனால் தனது அதி முக்கிய அண்டை நாட்டை புறக்கணித்தால் அதிக பாதிப்பு தனக்கே என்பதை ஐரோப்பிய ஒன்றியம் நன்கு உணர்ந்தே இருக்கிறது.